இப்பொழுது நாம் அறிவுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். மானசீகக் கட்டுப்பாடு என்று சொல்லும்பொழுது நீண்ட நேரம் தியானம் செய்து அதன் விளைவாக எண்ணங்களைக் கட்டுப்படுத்தி மௌனத்தை அடைகின்றதுதான் நமக்கு நினைவிற்கு வருகிறது. ஆனால் இது நமக்குத் தெரிந்த விஷயம். அதே சமயத்தில் அறிவு கட்டுப்பாட்டிற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தியானத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் இந்த இன்னொரு பக்கத்திற்குக் கொடுப்பதில்லை. இந்த இன்னொரு பக்கம் என்பது பேச்சுக் கட்டுப்பாடு. பொதுவாகப் பேச்சைக் குறைப்பது என்றால் பூரண மௌனத்திற்குப் போய்விடுவார்கள். ஆனால் உண்மையில் பூரண மௌனத்தைவிட அளவான பேச்சு என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுதான் உண்மையில் சிரமமான காரியம். சிரமமாக இருந்தாலும் அதற்கேற்ற பலனையும் நாம் பார்க்கலாம்.
படைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான். தேவையில்லாத பேச்சு இப்படி அதிகரிக்கும்போது இதற்கு எதிர்மாறாக இருக்கின்ற இந்தத் தாவர இனங்களின் அமைதியை நாம் இழந்துவிட்டோமே என்று ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.
அறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம். படிப்பறிவு இல்லாத மக்களைக் கவனித்தால் அன்னை சொல்வதினுடைய உண்மை தெரியவரும். அதாவது எழுத்தறிவு இல்லாதவர்களுக்குக் காதால் கேட்டுக் கொள்கின்ற விஷயங்களைத் திரும்பி வாயால் சொல்லிக் கொண்டால்தான் அவர்களுக்கு மனதில் படும். படிக்காத வேலைக்காரியிடம் எஜமானி அம்மா, கடைக்குப் போய் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு டஜன் முட்டை, அரை டஜன் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வா, அப்படியே திரும்பி வருகிற வழியில் பேப்பர் கடைக்குச் சென்று குமுதம் வாங்கி வா, குமுதம் இல்லை என்றால் தேவி வாங்கி வா என்று சொன்னால் இதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு கடைக்குப் போக மாட்டார்கள். படித்த பெண்ணாக இருந்தால் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு உடனே கிளம்பிவிடுவாள். படிக்காத பெண்ணாக இருந்தால் எஜமானி அம்மா சொன்னதை தானே வாய்விட்டு தனக்குச் சொல்க் கொள்வாள். அதாவது வாய்விட்டு பேசும்போதுதான் அவர்களுக்குச் சிந்திக்கவே முடிகிறது. எண்ணமே உருவாகிறது. இல்லாவிட்டால் அவர்களுக்கு எண்ணமோ, சிந்தனையோ உருவாவதில்லை.
படித்தவர்களை எடுத்துக் கொண்டால்கூட ஒரு கருத்தை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும்போது அப்படியே அவர்களுக்குப் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. தான் படித்த விஷயத்தை மற்றவர்களிடம் விளக்கிப் பேசினால்தான் அவர்கள் படித்தது அவர்களுக்கே தெளிவாகப் புரியும். நாலாவது தடவைதான் அவர்களுக்கே புரிகிறது என்னும்போது முதல், இரண்டு, மூன்று தடவைகள் அவர்கள் பேச்சே ஒரு வரையறை இல்லாமல் தெளிவில்லாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவில் தெளிவு பிறக்க வேண்டும் என்றால் கேள்விப்பட்டதைப் பல தடவைகள் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாகிறது. இந்நிலை அறிவு வளர்ச்சி சராசரி நிலையில் இருக்கிறதைக் காட்டுகிறது.
இப்படிப்பட்டவர்களைத் திடீரென்று மேடைக்கு அழைத்து, பேசும்படிச் சொன்னால் சரளமாகப் பேசமுடியாது. முன்னேற்பாடுகள் செய்து கொள்ள இவர்களுக்குக் கால அவகாசம் வேண்டும். அப்பொழுதுதான் எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவிற்குப் பேசுவது என்றெல்லாம் அவர்களால் நினைத்துப் பார்த்துத் தயார் செய்து கொள்ள முடியும். இவர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதாவது பேச்சு வன்மை உச்சகட்டத்தில் இருப்பதால் திடீரென்று அழைத்துப் பேசச் சொன்னாலும் சரளமாகப் பேசுவார்கள்.
ஆனால் பேச்சுக் கட்டுப்பாடு என்று எடுத்துக் கொண்டால் சிறந்த பேச்சாளருடைய பேச்சுகூட அனாவசியப் பேச்சு என்றாகிவிடலாம். அன்னையின் கண்ணோட்டாத்தில் தேவையில்லாத பேச்சு எதுவாக இருந்தாலும் அது அனாவசியப் பேச்சுதான். எது அவசியப் பேச்சு, எது அனாவசியப் பேச்சு என்று நிர்ணயிக்க வேண்டும் என்றால் முதலில் எத்தனை வகையான பேச்சு இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
முதல் வகைப் பேச்சு நம்முடைய அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை விஷயமாக மற்றவர்களுடன் நாம் பேசும் பேச்சு. இவ்வகைப் பேச்சுதான் நமக்கு அதிகபட்சமாக இருக்கிறது. அதே சமயத்தில் உபயோககரமாகவும் இருக்கிறது. இந்தப் பேச்சையே எடுத்துக் கொண்டால்கூட நிறைய பேசித்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நாம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம். அதாவது பேச்சைக் குறைந்தபட்சத்திற்குக் கொண்டு வந்தால் இதே அளவு வேலை இன்னும் விரைவாக நடந்து முடிகிறது என்பதைப் பார்க்கலாம். அதாவது பேச்சு குறைந்து அமைதியும் concentration-உம் அதிகரிக்கும்பொழுது வேலை விரைவு பெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவராக நாம் வாழ்கிறோம் என்றால், அவரவர்களுடைய அன்றாடச் செயல்களில் ஒரு ரெகுலாரிட்டி இருக்கும். அப்பட்சத்தில் ஆட்டமேட்டிக்காக நடக்கின்ற விஷயங்களை நாம் தினமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. காலையில் எழுந்தவுடன் குடும்பத் தலைவருக்கு டீ, காப்பி சர்வ் பண்ணுவது, பின்னர் காலை டிபன் கொடுப்பது என்பது அந்த வீட்டுத் தலைவி தானாகவே செய்வது. ஆகவே காபி வேண்டும், டிபன் வேண்டும் என்று இவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மாலையில் அவரவர் வீடு திரும்பும்பொழுது இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது, பள்ளியில் என்ன நடந்தது என்றும், வீட்டில் என்ன நடந்தது என்றும் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரெகுலராக இருக்கிறது என்றால் அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களே தாமாகச் சொல்வார்கள். சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்றால் அதை நாம் கவனித்து, ஏனின்று மௌனமாக இருக்கிறீர்கள்? office-இல் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாதா? என்று கேட்கலாம். மற்றபடி எல்லாம் ரெகுலராக போய்க் கொண்டு இருந்தால் வழக்கமான கேள்விகள் தேவையே இல்லை.
அடுத்ததாக நமக்குத் தெரிந்தவர்களுடன் நாம் சோஷியலாக உறவாடுகிறோம். நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, உறவினர்களைப் பார்க்கப் போவது, மற்றும் சோஷியல் function-க்குப் போவது என்பது எல்லாம் இதில் அடங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்முடைய பேச்சு என்பது நம்முடைய feelings-ஐ வெளிப்படுத்துவதாக அமைகிறது. இங்கேயும் பேச்சுக் கட்டுப்பாடு என்பது மிகவும் உதவியாக இருக்கும் என்று அன்னை சொல்கிறார். நம் பேச்சுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுது நமக்குள் ஓர் உணர்ச்சி பொங்கி எழுந்தால், இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தலாமா? வேண்டாமா? என்று சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டால் எத்தனையோ தேவையில்லாத தகராறுகளையும், சண்டைகளையும் நாம் தவிர்க்கலாம். நம்மைப் பற்றி உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பரே தவறாகப் பேசுகிறார் என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது. உடனே நமக்குக் கோபம் பொங்கி எழுகிறது. அவரைப் பார்த்தவுடன் எப்படி இப்படி நீங்கள் பேசலாம் என்று கேட்டுவிட மனம் துடிக்கிறது. உடனே போனை எடுத்து நம்பரை டயல் செய்து நண்பரை வசை பாடுவது என்பது ஒரு சாதாரணச் செயல். ஆனால் பேச்சுக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருப்பவர் இதைச் செய்வது சரியாகாது, மாறாகக் கோபம் பொங்கி எழுந்தாலும் பரவாயில்லை, இந்தக் கோபத்திலிருந்து முதலில் விடுபட்டு அன்பர் மன அமைதிக்கு வரவேண்டும். பின்னர் நிதானமாக மூன்றாவது நபர் கொடுத்த தகவல் உண்மையாக இருக்குமா? நண்பர் அப்படிப்பட்டவர்தானா? அல்லது மூன்றாவது மனிதர் விஷமியா? இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். சொன்னவர் விஷமி என்றால் நண்பர்மேல் உள்ள நம்பிக்கையை மதித்து அவரிடம் நம் கோபத்தை காட்டாமல் விஷமியிடம் இருந்து நாம் விலக வேண்டும். சொன்னவர் நம்மிடம் நல்லெண்ணம் கொண்டவர்தான், நாம்தான் நண்பரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தால் நண்பரிடம் இருந்து விலகுவது என்று முடிவு செய்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும். ஆக எப்படிப் போனாலும் அன்னை நம்மிடம் எதிர்பார்ப்பது அமைதியான செயல்பாடே தவிர உணர்ச்சிகளை வார்த்தைகளால் கொட்டி ஆவேசப்படுவது இல்லை. ஆக அன்னை என்ன சொல்ல வருகிறார் என்றால் கோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது என்கிறார். இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.
அனாவசியப் பேச்சு என்று எடுத்துக் கொள்ளும்பொழுது அடுத்தவர்களை நாம் விமர்சனம் செய்யும் எந்த பேச்சையும் நாம் இங்குக் கருத வேண்டும். நம்முடைய பொறுப்பில் இருக்கின்றவர்களைப் பற்றித்தான் பேச நமக்கு உரிமை இருக்கிறதே தவிர நம்முடைய பொறுப்பில் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி விமர்சனம் செய்ய நமக்கு உரிமையில்லை. நம் வீட்டுப் பையன் சரியாகப் படிக்காமல் வீணாகப் பொழுதைக் கழிக்கிறான் என்றால் அவனைக் கண்டித்துப் பேச நமக்கு உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுப் பையன் படிக்காமல் ஊர் சுற்றுகிறான் என்றால் நம் வீட்டில் அமர்ந்துகொண்டு அவனைக் கிண்டல் செய்து பேசுவது நமக்கு சரியில்லை. அவனைக் கண்டிப்பது அவன் தகப்பனாரின் பொறுப்பு. நம்முடைய கிண்டல் அவனுக்கும் உதவாது, அதே சமயத்தில் நம்முடைய பேச்சு கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதால் இந்தக் கிண்டல் நம் consciousness லெவலையும் இறக்குகிறது.
நாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் நம்முடைய வேலையே எங்கே என்ன வேலை நடக்கிறது என்று ரிப்போர்ட் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம். இப்படிப்பட்ட பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டால் அதை நாம் மிக ஜாக்கிரதையாக நிறைவேற்ற வேண்டும். அதாவது நம்முடைய ரிப்போர்ட் வேலையை ஒட்டித்தான் இருக்கவேண்டுமே தவிர பர்சனல் விஷயங்கள் எல்லாம் அதில் வரக்கூடாது. இரண்டாவதாக ரிப்போர்ட் என்பது பாரபட்சமின்றி ஒரு நடுநிலைமையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும். அதாவது நம்முடைய விருப்பு வெறுப்புகள், தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அதில் தலையிடக்கூடாது. நம்முடைய இன்ஸ்பெக்ஷனுக்கு ஆளாகி இருக்கின்ற ஒருவர் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம். ஆனால் அவரிடம் நமக்கு வேண்டியவருக்கு வேலை போட்டுத் தரும்படிச் சொல்ல அவரை அணுகியபோது அவர் அதை மறுத்திருக்கலாம். இதன் காரணமாக நமக்கு வந்த பொறுப்பை வைத்து அவர் டிபார்ட்மெண்டில் வேலை சரியாக நடக்கவில்லை என்று நாம் எழுதுவது சரியில்லை. இறுதியில் பொதுவாக என்ன சொல்லலாம் என்றால் அடுத்தவரைப் பற்றி நாம் பேசுவதை எந்த அளவிற்குக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது நல்லது என்றாகிறது. அதாவது எவரைப் பற்றியும் முடிவான அபிப்பிராயத்தை அடித்துச் சொல்வது சரியில்லை என்று அன்னை கூறுகிறார்.
நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது என்று அன்னை சொல்கிறார். இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன என்று கூறுகிறார். இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது என்கிறார். அடுத்தவர்களிடம் நாம் காண்கின்ற குறைகளைத் திருத்தக் கூடிய சக்தி நமக்கு இருந்தது என்றால் அப்பொழுது மட்டும் நாம் அவர்களைப் பகிங்கரமாகக் கண்டிக்கலாம் என்கிறார். நம்முடன் வேலை செய்பவருக்கு பங்சுவாலிட்டி இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை நம்மால் திருத்த முடியும் என்றால் அவரை நாம் கண்டிக்கலாம். அடுத்தவரைத் திருத்துகின்ற சக்தி எப்பொழுது நமக்குப் பிறக்கிறது என்று கேட்டால் நம்முடைய பர்சனாலிட்டி உண்மை நிரம்பியதாகவும், நம்முடைய ஜீவிய நிலை சத்திய ஜீவிய நிலைக்கு உயர்ந்து இருக்கும்பொழுதும்தான் என்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு தான் என்ற அகந்தை கரைந்து போய்விடுவதால் இறைவனின் பரிசுத்த கருவியாக இவர்களால் செயல்பட முடிகிறது.
இப்பொழுது சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் இலட்சியவாதிகள் ஆகியவர்கள் பேசுகின்ற பேச்சை எடுத்துக் கொள்வோம். இவர்கள் எல்லாம் உயர்ந்த நிலையில் இருப்பதால் இவர்களுடைய பேச்சில் இயற்கையிலேயே ஒரு கட்டுப்பாடு இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லை. இங்கேயும் பிடிவாதம், குறுகிய மனப்பான்மை என்பவை எல்லாம் நிறைந்து இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே வாதம் என்று ஆரம்பித்து முரண்பாடுகள் அதிகமாகி டிஸ்கஷன் என்பது தகராற்றில் போய் முடியக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தகராறு கூடாது என்றால் உண்மை முழுமையில் ஒரு பக்கம் தானே தவிர இதுவே முழுமையில்லை. அடுத்தவர்களுடைய கொள்கையில் உள்ள உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு நம்முடையதையும், மற்றவர்களுடையதையும், எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும்பொழுதுதான் முழு உண்மை வெளிவருகிறது. அக்கட்டத்தில் நாம் சுமுகத்தைக் கொண்டு வரலாம். ஆக இந்தப் பரந்த கண்ணோட்டம் வரும் வரையிலும் நம்முடைய பேச்சில் கட்டுப்பாடு இருந்தாலொழிய நாம் தகராறுகளைத் தவிர்க்க முடியாது. காஷ்மீர் விஷயமாக எப்பொழுது meeting போட்டாலும் அது இந்தியா பாகிஸ்தான் தகராற்றில் முடியும். காரணம் சம்பந்தப்பட்டவர்களின் குறுகிய கண்ணோட்டம். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர் மூன்றும் ஒன்றாக இணையும்பொழுதுதான் இந்தியா முழுமை பெறுகிறது என்ற கருத்தை மூன்று தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்பொழுது அங்கே வாதத்திற்கோ, தகராற்றுக்கோ இடமில்லை. உண்மை, முழுமை அடையும்பொழுது தானாகவே அங்கு சுமுகம் வந்துவிடுகிறது.
அடுத்தபடியாக அன்னை என்ன சொல்கிறார் என்றால் ஐடியாக்களுக்கு பிராக்டிக்கல் பவர் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது அவைகளுக்குச் செயல்படும் சக்தி வேண்டும். ஆகவே எந்தெந்த ஐடியாவிற்கு இந்த சக்தி இருக்கிறதோ, அவைகளை நாம் தாராளமாகப் பேச்சில் வெளிப்படுத்தலாம் என்கிறார். ஸ்ரீ அரவிந்தம் இப்படிப்பட்ட ஒரு ஐடியா, இதற்கு உலகைத் திருவுருமாற்றக் கூடிய சக்தி இருக்கிறது. ஆகவே இதைப் பற்றி நாம் நிறையவே பேசலாம்.
இப்பொழுது கல்வி என்ற சப்ஜெக்ட்டிற்கு வருவோம். படிப்பின் பாரத்தைக் குறைத்து மாணவ மாணவியருக்கு மேலும் நிறைய relaxation கொடுக்க வேண்டும் என்று ஒரு புதிய பாணி இப்பொழுது துவங்கியிருக்கிறது. இக்கண்ணோட்டத்தில் ஓர் உண்மை இருந்தாலும் relaxation என்ற பெயரில் மட்டமான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. Story discussion என்பது ஒரு லைட்டான subject தான், இருந்தாலும் எடுத்துக் கொள்கின்றstory தரமானstory ஆக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் காமரசம் நிரம்பிய நாவலை discussion க்கு எடுத்துக் கொள்ளும்பொழுது சூழலே தாழ்ந்து போகிறது. ஆகவே தரமான விஷயங்களை discuss செய்வது என்று முடிவு செய்தால்தான் பேச்சுக் கட்டுப்பாட்டில் நாம் வெற்றியைக் காண முடியும்.
Relaxation மற்றும் entertainment வேண்டும் என்ற எண்ணமோ மற்றும் இவை தவிர்க்க முடியாதவை என்ற நினைப்போ ஆன்மீகரீதியாக பார்க்கும்பொழுது சரியில்லை. நம்முடைய இறை ஆர்வம் (aspiration) குறையும்பொழுதும், மனவுறுதி தளரும் பொழுதும், தாமசம் தலை எடுக்கும்பொழுதும்தான் நமக்கு entertainmentவேண்டும் என்று தோன்றுகிறது. ஆகவே இறை ஆர்வத்தில் நாம் ஸ்டெடியாக இருந்தோம் என்றால் தாமசமே தலை எடுக்காமல் நம்மை விட்டு விலகுவதைப் பார்க்கலாம்.
அடுத்தபடியாக வீண்பேச்சு என்று எடுத்துக் கொண்டால் ஆன்மீகத்தில் வீண்பேச்சு கிடையாது என்ற கட்டாயம் இல்லை. மற்ற subjectக்களை போலவே ஆன்மீகத் துறையிலும் வீண் பேச்சு பேசலாம். புதிதாக ஆன்மீகத் துறைக்கு வருபவர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாகத் தாம் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஐந்து நிமிடம் அர்த்தமுள்ளதாகப் பேசவேண்டும் என்றாலும் கூட பல மணி நேரம் concentrationதேவைப்படுகிறது என்பதை இப்படிப்பட்டவர்கள் நாளடைவில்தான் தெரிந்து கொள்கிறார்கள்.
குருவாக ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களிடம் நமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக அனுபவங்களைப் பற்றிப் பேசவே கூடாது என்பது ஆன்மீகத் துறையில் ஓர் அடிப்படையான கட்டுப்பாடு ஆகும். நமக்குக் கிடைக்கின்ற அனுபவம் நம் பர்சனாலிட்டியில் நிலை பெறும்வரை அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்காமல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால் அனுபவம் நிலைபெறாமல் மறைந்துவிடும். ஒரு தீக்குச்சியைக் கொளுத்தும்பொழுது அது அணையாமல் இருப்பதற்குக் கையால் அதை மூடிக் கொள்கிறோம். கொளுத்திய தீக்குச்சி மேல் காற்றுப்பட அனுமதித்தால் உடனே அது அணைந்துவிடுகிறது. இம்மாதிரி நம் அனுபவத்தை நான்கு பேருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது இந்த அனுபவத்தில் இருக்கின்ற எனர்ஜி விரயமாகின்றது. குருநாதரிடம் மட்டும் சொல்லும்பொழுது நமக்கு வழிகாட்டல் கிடைக்கிறது என்பதால் அது நமக்கு உபயோகமாக இருக்கிறது.
இப்பொழுது நாம் குருவையே எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தில்கூட பேச்சுக் கட்டுப்பாட்டிற்கு ஓர் இடம் இருக்கிறது. சிஷ்யர்களுக்கு வழி காட்டுவதுதான் அவருடைய வேலை என்றில்லை. அவருடைய சொந்த யோக சாதனையில் அவர் முன்னேற்றம் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். முன்னேறுவதை அவர் நிறுத்தினார் என்றால் அவருடைய யோக சாதனையில் அவருக்கு ஓர் இறக்கம் வரத்தான் செய்யும். தமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக அனுபவத்தை உடனே சீடர்களிடம் பகிர்ந்து கொண்டார் என்றால் அந்த அனுபவம் கரைந்து போகக் கூடிய ஆபத்து அவருக்கும்தான் இருக்கிறது. அதே சமயத்தில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது அவருடைய ஆன்மீக முன்னேற்றமும் அந்த அளவிற்கு விரைவு பெறுகிறது. ஆக எந்த நேரம் எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் இருப்பது என்பதை அவர்தான் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யவேண்டும். அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது தற்பெருமை அதில் கலந்தது என்றால் அவரிடம் உள்ள புனிதம் போய்விடும். இறைவனே அவதாரமாகப் பூவுலகிற்கு வரும்போது கூட அவரும் தொடர்ந்து ஆன்மீகத் துறையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவர் தம்முடைய இறைத்தன்மையைப் பூவுலகில் பரிபூரணமாக வெளிப்படுத்த வேண்டும் என்றால், மானிடர்கள் perfectionஐ விரும்பி ஏற்க வேண்டும். கடமை உணர்வோடு நாம் இப்பொழுது செய்கின்றது எல்லாம் அன்பின் வெளிப்பாடாகச் செய்தோம் என்றால் நாம் perfectionஐ விரும்பி ஏற்பதாக அர்த்தமாகிறது. அதாவது முன்னேறுவதை ஒரு சிரமமாக நினைக்காமல் அதை ஓர் இன்பகரமான அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய முழு ஜீவனும் ஒத்துழைத்து முயற்சி எடுக்கும்பொழுது முன்னேற்றம் என்பது இன்பகரமான அனுபவமாகிறது. இப்படி இல்லாமல் நம்முடைய பர்சனாலிடியை நாம் பலவந்தப்படுத்தும்பொழுது நமக்குச் சிரமம் அதிகரிக்கிறது. இறுதியாக இவ்விஷயத்தில் அன்னை என்ன சொல்ல விரும்புகிறார் என்றால்,
நம் பேச்சு உண்மை நிரம்பியதாக இருக்கவேண்டும். நம் மனதில் மௌனம் குடிகொண்டு இருக்கவேண்டும். நம்முடைய இறை ஆர்வம் இடையறாது இருக்க வேண்டும். மேலும் அந்த இறை ஆர்வத்தில் sincerity இருக்கவேண்டும். Sincerity என்றால் நம் இறை ஆர்வத்திற்குப் பின்னால் நமக்குப் பேரும் புகழும் கிடைக்கவேண்டும் என்ற ambitionஎல்லாம் இருக்கக்கூடாது. இப்படி எல்லாம் நம் மனம் இருந்தால் எந்தச் சூழ்நிலையில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுவதுபோல் அமையும். கூடவோ, குறையவோ பேசும்படி அமையாது. மேலும் நம் பேச்சில் ஒரு கிரியேட்டிவ் சக்தி வெளிப்படும். இந்நிலையை எட்டுவதற்குச் சில வழி முறைகள் இருக்கின்றன. அதாவது என்ன பேசப் போகிறோம் என்று முன்கூட்டியே சிந்திக்கக் கூடாது. நாம் பேசப்போவதின் விளைவுகளையும் ஆராயக்கூடாது. அதாவது நாம் சொல்வது பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளப்படுமா? நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்ளப்படுமா என்று யோசிக்கக் கூடாது. இவையே மனதில் மௌனம் குடிகொள்ளும் வழிகள்.
இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும்.
உலகத்தை உண்டு பண்ணியது ஜீவியம் என்றாலும், அதைக் காப்பாற்றுவது அன்புதான். தெய்வீக அன்பை நாம் அனுபவித்துதான் உணர முடியும். தத்துவ ஞானிகளும்,ஆன்மீகவாதிகளும் தெய்வீக அன்பு என்ன என்று வார்த்தைகளால் வர்ணிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காமல் போய்விட்டன. நான் பெரியதாக வர்ணிக்க விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது அன்பு என்பது ஐக்கியத்தில் உண்டாகின்ற சந்தோஷத்தின் வெளிப்பாடாகும். ஐக்கிய பேரின்பமே அன்பு என்று சொல்லலாம். அன்பின் ஆதியை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஐக்கியத்திற்கு உதவக் கூடிய இரண்டு இயக்கங்கள் (movement) அதில் இருப்பதைப் பார்க்கலாம். ஒரு movement , அடுத்தவரை நாடுகிற நாட்டமாக அமைகிறது. இன்னொரு movement தன்னைப் பிறருக்கு வழங்கும் self-giving movementஆக அமைகிறது. படைப்பில் ஜீவியம் அதன் ஆதியிலிருந்து பிரிந்து unconsciousஆக மாறியபோது ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு அன்பைத் தவிர வேறு சிறந்த கருவியில்லை.
பிரபஞ்சத்தை அழிக்காமல் படைப்பை அதன் ஆதியோடு மீண்டும் இணைப்பதற்கு அவசியம் வந்தபொழுது ஐக்கியத்தின் கருவியாகிய அன்பு வெளிப்பட்டு அவ்வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெளிப்பட்ட அன்பு எல்லாம் இருந்த அடர்ந்த இருளில் இடம் தெரியாமல் சிதறிப்போனது. பின்னர் ஜடம் என்று உருவாகி பரிணாமம் என்று தொடங்கிய பிறகு அன்பின் வெளிப்பாடுகளும் ஆரம்பித்தன. இயற்கையின் எல்லா இயக்கங்களிலும் மற்றும் குழுமங்களிலும் நாம் அன்பின் வெளிப்பாட்டை உணரலாம். வெளிச்சம் வேண்டி செடிகளும் மரங்களும் மேல் நோக்கி வளர்வது அன்பின் வெளிப்பாடுதான். மலர்கள் தம்முடைய அழகு மற்றும் வாசனையின் மூலம் தம்மைப் பிறருக்கு வழங்குவதும் அன்பின் வெளிப்பாடுதான். பிராணிகளுடைய பசி, தாகம் மற்றும் இன அபிவிருத்தி என்று எல்லாவற்றிற்கும் பின்னால் தெரிந்தோ, தெரியாமலோ அன்பின் இயக்கம் இருக்கிறது. இதனுடைய உச்ச கட்ட வெளிப்பாட்டை, குட்டிகளைப் பேணிக் காக்கின்ற பெண் பாலூட்டும் பிராணிகளிடம் பார்க்கலாம். மனிதனை எடுத்துக் கொண்டால் அன்பின் செயல்பாடு conscious ஆகவே இருக்கிறது. மேலும் மனிதனைப் பொறுத்த அளவில் அன்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு இடையே இருந்த தொடர்பை இயற்கை மேலும் பலப்படுத்திவிட்டது. அதாவது இரண்டையுமே பிரித்துப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர்களே மிகவும் குறைவு என்றாயிற்று. அப்படி இனப் பெருக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டபின் அன்பின் தரம் இறங்கிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். ஆணையும் பெண்ணையும் ஜோடி சேர்ப்பது என்பது இயற்கையின் முதற்கட்ட நடவடிக்கை. அடுத்த கட்டமாகக் குடும்பத்தை உருவாக்கியது, பின்னர் படிப்படியாக ஜாதி, சமூகம், தேசம், இனம் என்று பெரிய பெரிய குழுமங்களை உருவாக்கியது. இறுதியில் இன்றுள்ள பல்வேறு நாடுகளையும், இனங்களையும் ஒன்று சேர்த்து மானிடர்களிடையே ஓர் அடிப்படை ஒற்றுமையை இயற்கை உருவாக்கத்தான் போகிறது.
ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படி ஒரு திட்டத்தோடு இயற்கை செயல்படுவதாக அறிவதில்லை. அவர்களுக்கு அமைந்த வாழ்க்கைச் சந்தர்ப்பங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். சிலருக்கு அதுபற்றி சந்தோஷம், சிலருக்குத் தம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை பற்றி அதிருப்தி. வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு சிற்றின்ப ஈடுபாடுகளில் முழுவதுமாக மூழ்கி இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்க்கைக்கு ஏதாவது உயர்ந்த நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வியே அவர்களுக்கு வருவதில்லை. முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது இல்லை. இப்படிப்பட்டவர்களை யோகப் பாதைக்கு அழைப்பதே தவறு. ஆன்மீகத்தைப் பற்றி இப்படிப்பட்டவர்களுடன் பேசினால் அவர்கள் நிலை குலைந்து போவார்கள். இயற்கையோடு அவர்களுக்கு இருக்கின்ற நெருக்கமான மற்றும், சுமுகமான உறவை நாம் அனாவசியமாகக் கெடுக்கக் கூடாது.
அன்பின் வெளிப்பாட்டையும், அதனால் கிடைக்கின்ற சந்தோஷத்தையும் ஏதோ ஒரு ரூபத்தில் உணர்ந்தவர்களும் இருக்கிறார்கள். தம்முடைய குடும்பத்திற்காகவும், தேசத்திற்காகவும், மதத்திற்காகவும் self-givingஇல் ஈடுபட்டு அதன்மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெருமகிழ்ச்சி அவர்களுக்கு இறைவனோடு ஒரு தொடர்பு கிடைத்ததுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது. ஆனால் இந்தத் தொடர்பு பெரும்பாலும் தற்காலிகமாகத்தான் இருக்கிறது. பரிசுத்தமான அன்பாக இருந்தால் கூட இறைவனோடு கிடைக்கின்ற தொடர்பு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அன்பு என்பதே இறைவனுடைய பல அம்சங்களில் ஓர் அம்சம்தான். ஓர் அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் நிரந்தரத் தொடர்பை அனுபவிக்க முடியாது.
இயற்கையினுடைய வேகம் போதும் என்பவர்களுக்கு அன்பினுடைய மானிட வெளிப்பாடே போதும். ஆனால் மானிட நிலையையே தாண்டி சத்திய ஜீவிய நிலைக்கு உயர விரும்புவர்களுக்கு இந்த இயற்கையின் வேகமோ மற்றும் மானிட அன்பின் வெளிப்பாடோ போதாது. இவர்கள் மானிட அன்பின் எல்லா ரூபங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும். மானிட அன்பு எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், மானிட அன்பு என்பது இறைவனோடு உள்ள தொடர்பிற்கு ஒரு குறுக்கீடாகவே அமைகிறது. இறை அன்பை உணர்ந்தவர்களுக்கு, மற்ற எல்லாவித அன்பும் தரம் குறைந்ததாகவே தெரியும். மானிட அன்பின் உயர்ந்த வெளிப்பாட்டில் கூட, சுயநலம், முரண்பாடு, ஆதிக்கம், எரிச்சல் இவை எல்லாம் கலந்து இருக்கத்தான் செய்கின்றன.
நாம் எதை விரும்புகிறோமோ அதாக மாறுகிறோம் என்பது பரவலாகத் தெரிந்த உண்மை. ஆகவே தெய்வத்தோடு ஐக்கியமாக வேண்டும் என்பவர்கள் இறைவனை மட்டும் விரும்ப வேண்டும். இறைவனோடு அன்பு பரிமாற்றம் செய்து கொண்டவர்களுக்குத் தான் அதோடு ஒப்பிடும்பொழுது மற்ற அன்பு வெளிப்பாடு எல்லாம் எவ்வளவு ருசி இல்லாமல் இருக்கிறது என்பது தெரியும். இறை அன்பை உணர கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றாலும் கிடைப்பது பேரின்பம் என்பதால் எந்தக் கட்டுப்பாட்டையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.
தெய்வீக அன்பு பூரணமாக வெளிப்படக்கூடிய நேரம் உலகத்தில் ஓர் அற்புதமான நேரம் என்றாகிறது. அப்படி இறை அன்பு முழுவதும் வெளிப்படும்பொழுதுதான் இந்தப் பூவுலகமும் இறைவனுக்கு ஏற்ற இருப்பிடமாகிறது. மனிதனுக்கும், தனக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக இறைவன் மானிட வடிவம் எடுத்து, அவ்வடிவத்தின் மூலம் இறை அன்பை வெளிப்படுத்த முயன்றது உண்டு. ஆனால் பவித்திரமான அன்பிற்கு உலகம் பாத்திரமாக இல்லாதபோது மனித வடிவில் இறைவன் எடுத்த முயற்சிகள் வீணாகி உள்ளன. மேலும் இறைவனும் மனிதனை நாடிவரும்பொழுது இறைவன் பலஹீனமாகிவிட்டான் என்று மனிதன் தன் அகந்தையால் நினைக்கின்றான். ஆகவே, மனிதன் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளும்வரை இறைவன் காத்திருக்க வேண்டியுள்ளது. மனிதனின் குறைபாடுகளையும் மீறி, அவனுக்கே இப்பொழுது என்ன புரிகிறது என்றால், உலகத்தில் துன்பங்களைத் தீர்ப்பதற்கு இறை அன்பு ஒன்றால்தான் முடியும் என்று தெரிகிறது. இந்த அன்பு வெளிப்படும் பொழுதுதான் இறைவனிடமிருந்து பிரிந்து வந்ததால் விளைந்த வேதனையிலிருந்து படைப்பால் மீற முடியும். நாம் எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அம்முயற்சியின் பலனாக மானிட உடம்பு இறைவனைப் பரிசுத்தமாக வெளிப்படுத்தக் கூடிய பக்குவத்தைப் பெறும் என்றால் அந்த முயற்சியை நாம் எடுக்கலாம். அப்படியானால் என்ன முயற்சியை எடுக்க வேண்டும், அதன் கட்டங்கள் என்ன என்று கேட்பீர்கள்.
நம்முடைய அன்பை எல்லாம் இறைவனுக்கே தருவது என்று முடிவு செய்து உள்ளோம். ஆகவே மற்றவர்களோடு நமக்கு இருக்கின்ற உறவில் எந்நேரமும் சுயநலமில்லாத ஒரு கருணையையும், நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தினாலே போதும். நம்முடைய நல்லெண்ணத்திற்குப் பிரதிபலனாக ஓர் அங்கீகாரத்தையோ அல்லது நன்றி அறிதலையோகூட நாடக் கூடாது. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தினாலும் நாம் அவர்கள் மேல் எரிச்சலை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மற்றவருடைய கோபம், மற்றும் கெட்டெண்ணத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கவேண்டும். நமக்கு ஓர்ஆதரவு வேண்டும் என்றால் அதை இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டும். அவர் நமக்கு வழிகாட்டி. தடுமாறும்போது நமக்கு ஒரு தெளிவை வழங்கி, சிரமப்படும்பொழுது ஆறுதலைச் சொல்லி நமக்கு வேண்டியதை எல்லாம் செய்வார். ஆக இறுதியாகச் சொன்னால் உணர்வுக் கட்டுப்பாடு என்பது எல்லாவித பாசபந்தங்களையும் விட்டுவிட்டு இறைவனோடு மட்டும் ஒரு பாசப் பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்றாகிறது. இறைவன் மேலேயே குறியாக இருக்கும்பொழுது இறைவனோடு நமக்கு ஓர் ஐக்கியம் கிட்டுகிறது. அது நம்முடைய சத்திய ஜீவிய திருவுருமாற்றத்திற்கு உதவுகிறது. பாசபந்தங்களிலிருந்து உணர்வுகள் விடுபடும்பொழுது பாசப் பிணைப்புகளால் வருகின்ற துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது. அறிவு அறியாமையில் இருந்து விடுபடும்பொழுது நமக்கு சத்தியஜீவிய ஞானம் கிடைக்கிறது. சத்திய ஜீவன் நமக்குள் பிறக்கும்பொழுது அதன் படைப்புத் திறனும் நமக்கு வருகிறது. ஆசையிலிருந்து விடுபடும்பொழுது நம்முடைய மன உறுதியை இறைவனுடைய மன உறுதியுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய திறன் கிடைக்கிறது. இதன் விளைவாக நமக்கு எந்நேரமும் அமைதியும், தெளிவும் கிடைக்கின்றன. இறுதியாக உடம்பிற்கு கிடைக்கும் விடுதலையின் பலனாக இயற்கையின் பிடியிலிருந்து நாம் விடுபடுகிறோம். அதாவது இயற்கையின் விதிமுறைகள் மனிதர்களைச் சாதாரண வாழ்க்கை என்ற தெரிந்த பாதையிலேயே இறுக்கப் பிடித்து வைத்து இருக்கின்றன. அறிவில்லாமல் இயற்கையின் அடிமையாக மாறிவிடுவார்கள். இயற்கையின் பிடியிலிருந்து உடம்பை விடுவித்துக் கொண்டவர்கள் என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதைச் சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். மற்றவரைப்போல எதுவும் புரியாமல் இயற்கை போட்ட வட்டத்திலேயே உழன்று கொண்டு இருக்கத் தேவையில்லை.
****
No comments:
Post a Comment