About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Wednesday, April 27, 2011

காதல்-அன்பு-


காதல். உலகையே ஆட்டிப்படைக்கும் உணர்வு முத்திரை. கவிஞர்களுக்கும் திரைக் கதாசிரியர்களுக்கும் நித்ய வார்த்தை. இளமையை கிறங்க வைக்கும் சத்திய போதை. முதுமையில் ஆதரவாய் நிற்கும் சித்திரச்சோலை.

loversdayபதின் பருவத்தில் காதலாக அறிமுகமாகும் உணர்வு, வாழ்வின் இறுதி வரை தனது உருவங்களை மாற்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் ஆகப்பெரும் அங்கீகாரமாக காதல் திகழ்கிறது. எனவேதான், காதலிக்கும் இதயத்தை விட, காதலிக்கப்படும் மனது கூடுதலாக துள்ளிக் குதித்து நர்த்தனமாடுகிறது.

அன்பு, பாசம், நேசம் என உறவுகளுக்கேற்ப உணர்வுகளுக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், காதலுக்குள் பொதிந்திருக்கும் மென்மையான பூப்போன்ற தன்மை தனித்துவமிக்கதாகவே அறியப்படுகிறது. சாதியாய், மதமாய், மொழியாய், இனமாய், உறவுகளாய் அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் உருவாகும் உணர்வை விட, இந்த கட்டுப்பாடுகளுக்குள் சிக்காத சுதந்திரப் பறவையாக காதல் சிறகடித்து பறக்கிறது என்பதலேயே அது தனி மகத்துவமும் பெறுகிறது.

ஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், ஏன் கடவுளின் பெயராலும் சிறைப்பட்டுக் கிடந்த சமூகத்தை விடுவிக்க வந்த மகாத்மாவாக காதல் வீறுகொண்டு எழுகிறது. இதனாலேயே இக்காதலுக்கு எதிர்ப்பு வலுத்தும் வருகிறது. திரைப்படங்களில் காதலை எதிர்த்து கிளம்பும் வில்லன்கள் போன்றே, ஆங்காங்கேயிருந்து அணியணியாய் கும்பல் கும்பலாய் டாட்டா சுமோவில் ஏறி கிளம்புகிறார்கள். ஆக, காலமெல்லாம் வில்லன்கள் எதிர்த்துக் கொண்டே இருப்பதால், 'நாயக' அந்துஸ்து பெற்ற காதல், அமரத்துவம் எய்தி வாழ்ந்து கொண்டே வருகிறது. மனிதர்களை கூறு போடும் வேலிகளை கட்டுடைத்து மனங்களை ஒன்றுபடுத்தும் பணியையும் செய்து சமூகத்தை வாழ வைக்கவும் செய்கிறது.

தன் பாதையில் உள்ள மேடு, பள்ளங்களை அடித்துச் செல்லும் காற்றாற்று வெள்ளம் போன்று காதல் பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனால் மனிதர்களுக்குள்ள வேறுபாடுகளை வடிவமைத்து வரும் பிற்போக்கு கசடுகள் அடித்துச் செல்லப்படுகிறன. கடவுளின் பெயரால் தான் வயிறு வளர்க்க சாதிய படி நிலையை கட்டமைத்துள்ள வருணாசிரமத்தை, மனு (அ)நீதியை காதல் என்னும் மெல்லிய, ஆனால் கூர்மையான ஆயுதம் உடைத்து எறிகிறது. இதனை எந்த சனாதானியால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? சமூக முரண்பாடுகளையே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்துவோர்களுக்கு, சமுதாயம் சமத்துவத்தை நோக்கி அடிஎடுத்து வைப்பதை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?

பெரியார் உள்ளிட்ட உன்னதத் தலைவர்களின் போராட்டத்தால், சமீபத்தில்தான் சுதந்திரக் காற்றை சற்றேனும் சுவாசிக்கத் துவங்கிய பெண்களை எதிர்த்தும், பெண்ணியத்தை ஒடுக்கவும் கும்பல் கும்பலாக கிளம்பி இருக்கிறார்கள். 'விடாதே பிடி', 'அடி', 'காதலை அனுமதிக்காதே' எனக் கிளம்பிய இவர்கள், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு வேலாயுதம், சூலாயுதம் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அவமானகரமான 'தேவதாசி' முறையையும், மனிதாபிமானமற்ற 'சதி' முறையையும் புனிதமாகக் கொண்டாடியவர்கள், இப்போதும் கூட அவற்றை ஆதரிப்பவர்கள், பண்பாடு குறித்து பேசுவதையும், அதற்காக போராடுவதாகக் கூறுவதையும் பார்த்து காலம் கைகொட்டி சிரிக்கிறது.

ஆயினும் எப்போதும் போன்று எது குறித்தும் கவலைப்படாத விஷ்வ இந்து பரிஷத், ராம்சேனா எனப் பலப்பெயர்களில் உலாவும் ஆர்எஸ்எஸ் பெத்தெடுத்துள்ள சங்பரிவாரக் கும்பல் தங்களது காதல் எதிர்ப்பு அஜெண்டாக்கள் மீது தீராத காதலோடு அலைந்துகொண்டே இருக்கிறது.

வரதட்சணை எனும் கொடிய விஷத்தாலும், ஜாதகங்கள் கூறும் தோஷத்தாலும் ஒரு பக்கம் முதிர் கன்னிகளின் எண்ணிக்கை சத்தமில்லாமல் பெருகி வருவதை, சங்பரிவாரங்கள் போற்றும் பாரதமாதா கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பரிதாபத்துக்குரிய அப்பெண்களின் திருமணத் தடையை நீக்க முன்வராத இந்த மதக்காதல் வெறியர்கள், காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு கட்டாய பதிவுத் திருமணம் செய்யப் போவதாகவும், 'தாலியைக் கட்டு அல்லது ராக்கியைக் கட்டு' எனவும் கூச்சநாச்சமின்றி பிதற்றி வருகின்றனர். அதிலும் இந்தாண்டு காதலர் தினம் சனிக்கிழமை வந்துவிட்டதால், பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருக்காது என தாமதமாகத் தெரிந்துகொண்ட ராம்சேனாவின் தலைவர் முத்தாலிக், காதலர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார். தமிழக பாஜகவின் சார்பில் இல.கணேசனும் காதலர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இவர்களுக்கு மத்தியில்தான் காதலர் தினம் ஆண்டுதோறும் வெற்றிகரமாகக் கடந்து போய் கொண்டே இருக்கிறது. புனித வாலெண்டைன் எனும் பாதிரியாரின் நினைவாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாலெண்டைன் பாதிரியார் குறித்து ஆய்வுகளில் இறங்கினால், வரலாறு நெடுகிலும் ஆங்காங்கே சில வாலெண்டைன்கள் உலவுகின்றனர். இக்காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு காரணமான வாலெண்டைன் யார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சாகவே காணப்படுகிறது. ஆயினும் வாலெண்டைன் குறித்தான கதைகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.

மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் ரோம் நாட்டை ஆண்ட கிளாடியஸ் மன்னன், போர் வீரர்களின் திறன்களை காக்கும் பொருட்டு(!), அவர்கள் திருமணம் செய்து கொள்வதை தடை செய்திருந்தான். இத்தகைய முட்டாள்தனமான முடிவுக்கு எதிராக கிளம்பிய பாதிரியார் வாலெண்டைன், ராணுவ வீரர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட மன்னன், வாலெண்டைனை சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தார் என ஒரு கதை கூறுகிறது. மற்றொரு கதையோ, தன்னை மதம் மாற்ற முயன்ற மன்னனது உத்தரவுக்குக் கீழ்படியாததால், பாதிரியார் வாலெண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதுபோன்று பல கதைகள் கூறப்பட்டாலும், அனைத்து கதைகளுமே வாலெண்டைன் ஓர் ஒப்பற்ற தியாகி என்னும் ஒற்றை வரியில் ஒன்றுபட்டு நிற்கின்றன. இது ஒன்று போதுமே, அவரது நினைவைப் போற்றும் வகையில் காதலர் தினம் கொண்டாட, என காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். தனிநபர் மீதோ, மனித சமூகத்தின் மீதோ ஏற்படும் உச்சப்பட்ச காதல்தானே தியாகமாக மாறுகிறது!

உலகமயமான சூழ்நிலையில் வர்த்தக நோக்கமும் காதலர் தினத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக காதலர் தினத்துக்குத்தான் அதிகளவில் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் வியாபாரம் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிப்பது, வர்த்தகத்தின் பங்களிப்பையும் உறுதி செய்துகிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியை சந்தித்து வரும் இளைய தலைமுறை தெளிவாகவே செல்கிறது. மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதல்ல காதல் என்பதை புரிந்தே இருக்கிறது. காதல் வழியான திருமணமானாலும், அதற்கு வாய்ப்பில்லாத நிலையில், திருமணம் வழியாக வந்த காதலானாலும், காதல் மனிதர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. சமூக, பொருளாதார அடிப்படையில் பல்வேறு மனோவியல் பிரச்சனைகளையும் காதல் சந்திக்கிறது. அப்பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்த்துக் கொண்டுள்ள அதற்கு, அதனை வெல்லும் திறனும் இருக்கிறது.

உயிர் உற்பத்திக்கு மட்டுமின்றி, மனிதனை மனிதனாக உயிர்ப்பு செய்ய வைக்கும் மாயவித்தையை காதல் காலம் தோறும் நிகழ்த்திக் கொண்டேதான் போகிறது. மனித குலத்தின் விடுதலைக்காக செதுக்கப்பட்ட தத்துவத்தை உலகிற்கு அளிக்க மார்க்ஸ்க்கு ஜென்னியின் காதல் உத்வேகம் அளித்ததைப் போன்று, சமூகத்தின் ஏற்றத்தாழ்வை நீக்கும் மந்திர மருந்தை அட்சயப் பாத்திரத்தில் ஏந்திய காதல் உலகையே சுற்றி வருகிறது. கண்ணம்மாவின் எட்டையபுரத்து காதலன் குரல் உரத்துக் கேட்கிறது.

"அன்பு வாழ்கவென்றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைக்கொட்டி வாழ்த்துவோம்"

No comments:

Post a Comment